ராஜபாளையம் : ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் நிறுத்திவைக்க வேண்டிய 108 ஆம்புலன்ஸ்களை 12 கி.மீ., துாரம் அப்பால் நிறுத்துவதால் அவசரத்திற்கு ஆம்புலன்ஸ்களை பயன்படுத்த முடியாது நோயாளிகள் அதிக கட்டணத்தில் தனியார் ஆம்புலன்ஸ்களை நாடும் நிலை உள்ளது.
ராஜபாளையம் அரசு பொது மருத்துவமனைக்கென ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் அரசு பொதுமருத்துவமனையில் நிறுத்த இடம் இல்லாமல் நகர்ப்பகுதியில் இருந்து 12 கி.மீ., தொலைவில் உள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைக்கு அழைத்தாலும் இருப்பிடத்தில் இருந்து வந்து பயனாளிகளை ஏற்றி கொண்டு மீண்டும் மதுரை, நெல்லை உள்ளிட்ட நகர்ப்பகுதி அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல வேண்டியுள்ளது. இந்த காலதாமத்தால் உயிருக்கு போராடும் நோயாளிகள் நிலை கேள்விக்குறியாகிறது.
இந்நேரத்தில் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் ஆம்புலன்ஸ்களை மக்கள் நாடும் நிலை உள்ளது. அதிககட்டணத்தால் ஏழை மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். இதோடுஆம்புலன்ஸ் தாமதத்தை பயன்படுத்தும் மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தனியார்மருத்துவமனைகளுக்கு திசை மாற்றுவதும் தொடர்கிறது. இது பற்றி தொடர் புகார்கள் வந்த போதும் மருத்துவமனை நிர்வாகம் கண்டுக்காது வேடிக்கை பார்க்கிறது. இதை தவிர்க்க ராஜபாளையம் மருத்துவமனையிலே ஆம்புலன்ஸ்களை நிறத்த மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.