ரூ.70க்கு மருத்துவ காப்பீடு அட்டை… கிராமங்களில் கூவி கூவி வசூல் வேட்டை

ஸ்ரீவில்லிபுத்துார் : அரசின் மருத்துவகாப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை எடுத்து கொடுத்து ரூ.70 வசூலிக்கும் பணியில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது உண்மைத்தன்மை கொண்டதா என்பதை அறியாமல் பொதுமக்களும் வாங்கி செல்கின்றனர்.மத்திய, மாநில அரசுகளின் சார்பில் ரூ.5 லட்சம் வரை மருத்துவகாப்பீடு பெறும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளதுஇதில் ஏற்கனவே கலைஞர் காப்பீடு திட்டம், முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றவர்களும் அப்படியே முழுஅளவில் இத்திட்டத்தில் இணைக்கபட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் தாங்களும் இருக்கிறமோ என்பதை பழைய ரேஷன்கார்டு, புதிய ஸ்மார்ட் கார்டு நம்பரை கொண்டு அந்தந்த நகர அரசு மருத்துவமனைகளில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் உறுதிபடுத்தி கொள்ளலாம்.

இல்லாதவர்கள் அந்த அலுவலகத்தில் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வி.ஏ.ஓ.,விடம் சான்று பெற்று கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு சேருபவர்களுக்கு அடையாள அட்டை ஒன்று அரசால் வழங்கப்படுகிறது.ஆனால் இத்தகைய விபரங்கள் கிராமத்து மக்களுக்கு முழுஅளவில் சேரவில்லை. இதை பயன்படுத்தி கொள்ளும் சில தனிநபர்கள் கிராமங்கள் மற்றும் நகரங்களில் பொது இடங்கள் மற்றும் ரேஷன்கடைகள் முன் விடுமுறை நாட்களில் உட்கார்ந்து கொண்டு, மருத்துவகாப்பீடு திட்ட அடையாள அட்டைகளை பிரின்ட் அவுட் எடுத்து கொடுத்து ரூ.70 முதல் ரூ.100 வரை வசூலிக்கின்றனர்.

இத்தகைய அட்டைகள் உண்மைத்தன்மை வாய்ந்ததா, போலியாக வழங்கபடுகிறதா என்ற சர்ச்சையும் எழுகிறது.மாவட்ட அரசு நிர்வாகம் இதில் சரியான வழிகாட்டுதல்களையும், அறிவிப்புகளையும் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும். இல்லையெனில் மத்திய, மாநில அரசுகளுக்கு அவப்பெயரைதான் ஏற்படுத்தும்.

Related posts

Leave a Comment