34 கி.மீ., நீளத்தில் ‘பசுமைச்சாலை’ … ரூ.150 கோடியில் அமைகிறது சிவகாசி ‛ரிங்ரோடு’

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் பொருட்டு 13.5 கி.மீ., நீளத்தில் ரூ.150 கோடி மதிப்பில் சிவகாசி ரிங்ரோடு’ எனும் பசுமைச்சாலை விரைவில் அமைகிறது.

இதற்காக நில ஆர்ஜிதம் செய்ய மாவட்ட வருவாய் துறையிடம் ரூ.20 கோடியை மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கி உள்ளது. இதையடுத்து நில ஆர்ஜிதப்பணியை அத்துறை துவங்கி உள்ளது.சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்துார் மெயின் ரோடு நகர் வழியாக செல்கிறது. குறுகிய, நெருக்கடி மிகுந்த இவ்வழித்தடத்தில் 6 கி.மீ., நீளத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து ஊர்ந்து செல்வதால் 30 முதல் 40 நிமிடங்கள் கால விரையம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க சிவகாசி ரிங்ரோடு அமைவது மட்டுமே தீர்வாகும் என அனைத்து தரப்பினரும் அரசிடம் வலியுறுத்தினர்.

இக்கோரிக்கையை ஏற்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சிவகாசி ரிங் ரோடு அமைப்பதற்கான அறிவிப்பை 2012ல் அறிவித்தார். இதையடுத்து நில ஆர்ஜிதம் செய்ய மாவட்ட வருவாய் துறையிடம் ரூ.20 கோடியை மாநில நெடுஞ்சாலைத்துறை வழங்கியது. எனினும் பணிகள் துவங்கவில்லை.விருதுநகர் வந்த முதல்வர் பழனிசாமியிடம் சிவகாசி ரிங்ரோடு அமைப்பது குறித்து மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று 33.5 கி.மீ., நீளத்தில் ரூ.150 கோடி மதிப்பில் சிவகாசி ரிங்ரோட்டை பசுமைச்சாலையாக அதாவது 30 மீட்டர் அகலத்தில் இரு வழிச்சாலையாக அமைக்க ஒப்புதல் வழங்கினார்.

இதையடுத்து நில ஆர்ஜிதம் செய்வதற்கான பணியை மாவட்ட வருவாய் துறை உடனடியாக களம் இறங்கி உள்ளது. நிலத்தை ஆர்ஜிதம் செய்வதற்காக 82 நில உரிமையாளர்களுக்கு ஒரு மாதத்திற்குள் பதில் கூறும்படி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிலம் கையகப்படுத்தப் படுவோருக்கு உரிய இழப்பீட்டு தொகையும் உடனுக்குடன் வழங்கப்படும். ரிங்ரோடு அமைக்க 147 எக்டேர் நிலம் தேவை. இதில் 132 ஏக்கர் பட்டா நிலங்கள். 14 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்கள் அன அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்படி கீழ திருத்தங்கல், நாராயணபுரம், அனுப்பன்குளம், வெற்றிலையூரணி, கொங்கலபுரம், ஆனையூர், எஞ்சார், எடப்பட்டி, நமஸ்கிர்தன்பட்டி, திருத்தங்கல் என பத்து கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்யப்பட உள்ளது. இப்பணிகள் முடிந்ததும் 30 நாட்களில் விருதுநகர், சாத்துார், கழுகுமலை, ஆலங்குளம், ஸ்ரீவில்லிபுத்துார் இடையே 33.5 கி.மீ., நீளத்தில் சிவகாசி நகரின் வெளியில் சிவகாசி ரிங்ரோடு அமைக்க நெடுஞ்சாலைத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.இதை தொடர்ந்து சிவகாசி ரிங்ரோடு, விருதுநகர் அரசு மருத்துவ கல்லுாரி, பல் மருத்துவ கல்லுாரி என வறட்சியான விருதுநகர் மாவட்டம் வலுவான மாவட்டமாக மிளிர உள்ளது.

Related posts

Leave a Comment