விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் பராமரிப்பு இல்லாததால் நீர் நிலைகள், கண்மாய்களில் கழிவு நீர் சங்கமித்து வீணாகி வருகிறது. பன்றிகள் வளர்க்கும் மையமாக மாற்றப்பட்டுள்ளதால் தொற்று நோய் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்) பராமரிப்பில் 230 கண்மாய்கள், ஊரக வளர்ச்சித்துறை பராமரிப்பில் 712 கண்மாய்கள், மாவட்டத்தில் உள்ள 450 ஊராட்சிகள் பராமரிப்பில் ஊரணிகள், குளங்கள் உள்ளன. இவை கிராமங்களில் மழை நீர் சேமிப்பு மையமாக உள்ளது. இவற்றில் மழை காலங்களில் மழை நீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீர் ஆதாரம் மேம்படுத்தப்படுகிறது.
தற்போது பல கண்மாய்கள் ,வரத்து கால்வாய்கள் பராமரிப்பு இல்லாததால் துார்ந்து விட்டன.சமீபத்தில் பெய்த மழையால் 60 சதவீத கண்மாய்கள் நிரம்பின. தேவையான மழை பெய்தும் 40 சதவீதம் கண்மாய்கள், நீர் நிலைகளில் நிரம்பவில்லை. பெரும்பாலான கண்மாய்களில் கழிவுகள் தேங்குவதால் பன்றிகள் கேந்திரமாக மாறி விட்டன.
இதன் மூலம் தொற்று பரவும் அபாயமும் நிலவுகிறது. கோடையை பயன்படுத்தி கண்மாய்களை பராமரிப்பதோடு கழிவுகளை கலப்பதை தடுத்து பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்………..
கண்மாய் மீட்பு குழு
பராமரிப்பில்லாததால் கண்மாய்களில் மழை நீர் சேமிக்க இயலவில்லை. இதனால் பாசன பரப்பளவு குறைந்து விளை பொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. விவசாயிகள், தன்னார்வலர்களை இணைத்து கண்மாய் மீட்பு குழு அமைக்க வேண்டும். இதன் மூலம் கண்மாய்கள், நீர் நிலைகளை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.- ரெங்கராஜா, விவசாயி, எரிச்சநத்தம்………..