விருதுநகர் : விருதுநகரில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் பிப்.,26 ல் அமலானது. இதையடுத்து மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான கண்ணன் தலைமையில் 21 பறக்கும்படை, 21 நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் தலா எஸ்.ஐ., ஏட்டு, இரண்டு கான்ஸ்டபிள்கள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதி களிலும் தினமும் மூன்று ஷிப்ட் வீதம் ரோந்து பணியில் தீவிர ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்துக்கு இடமான வாகனங்களை நிறுத்தி சோதனை நடத்துகின்றனர்.விருதுநகரில் நிலையான கண்காணிப்புக்குழு அலுவலர் மோகன்ராஜ் தலைமையில் வச்சக்காரப்பட்டி எஸ்.ஐ., மணிகண்டன், ஏட்டு முத்துக்கிருஷ்ணன், கான்ஸ்டபிள்கள் கார்த்திக், மாதா சிலோன் மணி ஆகியோர் சிவகாசி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, கருமாதி மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடத்தினர். சோதனையிடும் வாகனங்களை வீடியோவில் பதிவு செய்கின்றனர். சோதனைக்குளாகும் வாகனங்கள், பறிமுதல் செய்யப்படும் பணம், பொருட்கள் குறித்து கலெக்டரிடம் தினமும் பட்டியல் தாக்கல் செய்து வருகின்றனர்.