வானதி பாலசுப்பிரமணியன். வாசி வாழ்வியல் மையம்.

 1. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடுதான் வானதியின் சொந்த ஊர். இளம் வயதில் இவர் பார்த்த ஒரு சம்பவம்தான் வானதியின் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது.

“சிறப்புக் குழந்தைகள், அவர்களது செயல்பாடு குறித்தெல்லாம் எனக்கு அப்போது எந்த புரிதலும் கிடையாது. எல்லோருக்கும் சிறப்புக் குழந்தைகள் குறித்து ஒரு பார்வை இருக்கும்தானே? எனக்கு அப்படிதான் இருந்தது. எந்த புரிதலும் இல்லை. சிறுவயதில் நான் பார்த்த ஒரு காட்சி என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது,” என்கிறார் வானதி.

 1. வானதி பாலசுப்பிரமணியன்.
  வாசி வாழ்வியல் மையம்.
  2/525
  வடமலைசமுத்திரம் ரோடு,
  கருத்தபிள்ளையூர் to பாபநாசம்
  அம்பாசமுத்திரம்
  திருநெல்வேலி 627418

தொடர்பு எண். 9677853412

வாழ்வியலை போதிக்கும் வானதி…

‘‘சிறப்புக் குழந்தைங்கனா எச்சில் ஒழுகிட்டு பிறரின் பரிதாபப் பார்வைக்கு ஆட்படறவங்கனு நினைக்கிறோம். ஆனா, இந்த வாழ்வினை கொண்டாட பெரும் தகுதியும் திறமையும் கொண்டவங்க அவங்க. இந்தச் சமூகத்துல யாருடைய துணையும் இல்லாம அவங்களால நம்பிக்கையா வாழ முடியும். அதை நிரூபிக்கத்தான் இந்தப் பயணம்…’’ தீர்க்கமான குரலில் தன்னம்பிக்கையுடன் பேசும் வானதி, சிறப்புக் குழந்தைகளின் நல்லாசிரியர். இப்போது திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கென்றே ஒரு பிரத்யேக மையத்தை அத்துணை ரம்மியமாய் வடிவமைத்துள்ளார் இவர். வரும் ஜனவரியில் திறப்பு விழா காண இருக்கிறது இந்த மையம். இது மையம் மட்டுமல்ல. வானதியின் வீடும் கூட. சுற்றிலும் மரங்கள் சூழ அமைதியாக, அழகாக காட்சியளிக்கிறது அவரின் இல்லம். ஆனால், அவருக்கும் இந்த ஊருக்கும் துளியும் சம்பந்தமில்லை. இங்கே உறவுக்காரர்களும் கிடையாது. தஞ்சாவூர் பக்கத்திலுள்ள ஒரத்தநாட்டைச் சேர்ந்தவருக்கு எப்படி வந்தது இந்த எண்ணம்? ‘‘பொதுவா இங்க சிறப்புக் குழந்தைகள் பத்தின புரிதல் ரொம்பக் குறைவு. குறிப்பா, பெற்றோருக்கே அந்தக் குழந்தைக்கு என்ன பிரச்னைனு தெரிய நீண்ட நாட்களாகிடும். இதுல கிராமப்புறங்களப் பத்தி சொல்லவே வேண்டாம். விதினு நினைச்சிட்டு அந்தக் குழந்தைய வீட்டுக்குள்ளேயே வாழப் பழக்கிடுவாங்க.

ஆனா, பெற்றோரின் காலத்துக்குப் பிறகு யார் அவங்கள பார்த்துக்கிறது? அவங்களால தனிச்சு வாழ முடியுமா? இந்தக் கேள்விதான் ரொம்ப நாளா என் மனசுல இருந்துச்சு. அதுக்கொரு தீர்வுதான் இந்த மையம். இதற்கு ‘வாசி’ சிறப்பு மையம்னு பெயர் வச்சிருக்கேன். வாசினா காற்றுனு அர்த்தம். சித்தர்களின் மூச்சுப் பயிற்சியில வாசி வசப்பட்டால் எல்லாமே வசப்படும்னு இருக்கு. இந்தக் குழந்தைகளுக்கு எல்லாமே வசப்படணும்னுதான் இந்தப் பெயர். மத்தபடி சாமிக்கென தனி அறையோ படமோ எதுவும் இங்க கிடையாது. எந்த மதம் சார்ந்தும் எதையும் கொண்டு வரவும் மாட்டேன். இது எல்லோருக்குமானது…’’ என்றவரிடம் ‘‘ஏன் பாபநாசம் பகுதியைத் தேர்ந்தெடுத்தீர்கள்?’’ என்றோம். ‘‘நான் அக்குபஞ்சர் முடிச்சதும் திருச்சி ஹோலி கிராஸ் காலேஜ்ல புனர்வாழ்வியல் துறையில இந்தக் குழந்தைகளுக்கென்று இருக்கிற சிறப்புக் கல்வியை முடிச்சேன். எனக்குள்ள ஒரு தேடல் இருந்திட்டே இருந்துச்சு. ஏதாவது ஒரு விஷயத்தை ஆத்மார்த்தமா பண்ணணும்னு நினைச்சேன். அதனாலயே இந்தக் கோர்ஸ்ல சேர்ந்தேன். அப்புறம், திருச்சி, தஞ்சாவூர் பகுதியில சிறப்பு ஆசிரியரா பணியாற்றிட்டு இருந்தேன். மூணு வருஷத்துக்கு முன்னாடி இங்க சிவசைலத்திலுள்ள அவ்வை ஆசிரமத்து ஆசிரியர்களுக்குப் பயிற்சியளிக்க வந்தேன்.

அப்பதான் இந்தப் பகுதியை சுத்திப் பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்தது. என்னோட கனவே இந்தக் குழந்தைகளுக்கென ஒரு சிறப்பு மையத்தை அமைக்கணும்ங்கிறது. அது, இந்தக் குழந்தைகளுக்கென உள்ள வழக்கமான பள்ளி போல இருக்கக் கூடாதுனு உறுதியா இருந்தேன். இந்த இடம்தான் அதுக்கானதுனு மனசுல தோணுச்சு. உடனே, மேலாம்பூர் பகுதியில ஐந்தரை ஏக்கர் நிலத்தை வாங்கி மையத்தை உருவாக்கிட்டேன்…’’ என உற்சாகமாகச் சொல்லும் வானதிக்கு இப்போது 32 வயதாகிறது. ‘‘இங்க வர்ற குழந்தைகளுக்கு நான் ஏ,பி,சி,டியோ, கலர்ஸோ சொல்லித் தரமாட்டேன். மாறா, அவங்களுக்கு விதைகள் கொடுப்பேன். அதிலிருந்து வர்ற செடிகளை அவங்க கவனிச்சு, முளைச்சு வர்ற காய்களைப் பறிக்கணும். அப்புறம், நான் சமைக்கச் சொல்லிக் கொடுப்பேன். இங்க அம்மிக்கல், ஆட்டுக்கல், விறகு அடுப்புனு பயன்பாட்டுல வச்சிருக்கோம். கேஸ் அடுப்பு ஒரு அவசரத்துக்கு மட்டும்தான். ஏன்னா விறகு எடுத்து, அடுப்புல பத்த வச்சு, மண் பானையை மேல வைக்கிற மாதிரியான சிறந்த கவனிப்புப் பயிற்சி வேறெதுமில்ல. அதுமாதிரி இங்க டிவியோ, எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களோ உபயோகப்படுத்துறதில்ல. ஏன்னா, சிறப்புக் குழந்தைகள் பேசுவதற்கு இதெல்லாம் ரொம்பத் தடையா இருக்கும்.

அதுபோல துரித உணவும் செய்றதில்ல. காரணம், மரபு வழி இயற்கை உணவுகளுக்குக் குழந்தைகளைத் திருப்புறதால ஆரோக்கியம் மேம்படும். அடுத்து, மூலிகைகளிலிருந்து பல்பொடி செய்றது உள்ளிட்ட விஷயங்களைக் கத்துக் கொடுக்க இருக்கேன். தவிர, இங்க பனை மரங்கள் நிறைய இருக்கு. அதன் ஓலையிலிருந்து கைவினைப் பொருட்கள் செய்றதைச் சொல்லிக் கொடுத்து, அதை விற்கவும் கத்துத் தரப் போறேன். இதற்காக பத்தாயிரம் எண்கள் வரை எல்லாம் அவங்க படிக்க வேண்டியதில்ல. வெறும் பத்து எண்கள் தெரிஞ்சா போதும். அதுக்காக, குன்னிமுத்துகளை ஒண்ணு- ரெண்டு- மூணுனு களிமண்ல ஒட்டி அதை தொட்டு உணரும்படி செய்திருக்கேன். அதனால, இங்க கிளாஸ் ரூம் கான்செப்ட்டே கிடையாது. மழையும் பாடம்தான். வெயிலும் பாடம்தான். நமக்கு இயற்கைதான் எல்லாமே. அது அவ்வளவு விஷயங்கள சொல்லித் தந்திட்டே இருக்கு. நாம்தான் குழந்தைக்கும் இயற்கைக்கும் நடுவே தொடர்பில்லாமல் செய்திட்டு நமக்கு பிடிச்ச மாதிரி அவங்கள வாழ நிர்ப்பந்திக்கிறோம். அது குழந்தைக்கான கல்வியா இருக்காது. அதனால, அகடமிக்னு இல்லாம வாழ்வியல் சார்ந்த விஷயங்களை எவ்வளவு கொடுக்க முடியுமோ அவ்வளவு சொல்லித் தரத்தான் இந்த இடத்தைத் தேர்ந்தெடுதேன்.

நாளைக்கு நானோ, அந்தக் குழந்தைகளின் அப்பா அம்மாவோ இல்லாமல் போகலாம். ஆனா, அந்தக் குழந்தை யாரும் இல்லாமல், யாரையும் சாராமல் தனியா வாழும்ங்கிற நம்பிக்கையை இந்த மையம் ஏற்படுத்தும். அதுவே என் நோக்கம்…’’ என விவரிக்கும் வானதி, அந்த இடத்தைச் சுற்றிலும் 500 மரக்கன்றுகளை நட்டு மேலும் அழகாக்கியுள்ளார். ‘‘ஆரம்பத்துல இந்த இடம் வெறும் கோரைப்புல்லா இருந்துச்சு. அப்புறம், பழங்கள் தரக்கூடிய மரக்கன்றுகளுடன், மழை தரக்கூடிய மரங்களையும், மூலிகைச் செடிகளையும் நட்டு வச்சேன். ஆரம்பிச்சு எட்டு மாசம்தான் இருக்கும். அதுக்குள்ள நல்லா வளர்ந்திருக்கு. இப்ப சுத்துப்பட்டுல இருக்கிற கிராமங்கள்ல இருந்து தங்கள் குழந்தைகள அழைச்சிட்டு வர்றாங்க. அந்தக் குழந்தைகளுக்குப் பயிற்சி  கொடுத்திட்டு இருக்கேன். குறிப்பா, பிறந்து மூணு மாசக் குழந்தையில இருந்து எட்டு வயசு வரை கவனிக்கிறேன். ஏன்னா, இந்தக் காலக்கட்டத்துலதான் மாற்றத்தை எளிதா கொண்டு வரமுடியும். அதுக்காக பத்து வயசுக்கு மேற்பட்ட குழந்தைகள் வரக்கூடாதுனு இல்ல. அவங்களும் பயிற்சிக்கு வரலாம். பக்கத்துல இருந்து வர்றவங்க தினமும் இங்க வந்து பயிற்சி எடுத்திட்டு போகலாம். தொலைவில் உள்ளவங்க தங்கியிருந்து பயிற்சி எடுக்கலாம். அதுக்கும் அறைகள் சேர்த்தே கட்டியிருக்கேன்.

வசதி இருக்கிறவங்களுக்கு கட்டணம் உண்டு. இல்லாதவங்களுக்கு லவசம்தான். குழந்தைகளுடன் அவங்க அம்மாவோ, அப்பாவோ கட்டாயம் வந்து தங்கணும். தினமும் வர்ற குழந்தைகளின் பெற்றோரும் உடன் வர்றது அவசியம். ஏன்னா, இங்க குழந்தைகள் கத்துக்கிட ஒண்ணுமில்ல. அவன் காலையில எழுந்து பறவைகள் கூட விளையாடிட்டு, சரியான நேரத்துல சாப்பிட்டுட்டு, செடிகள் எப்படி உதயமாகுது, என்ன பூ பூக்குதுனு எல்லாமே தெரிஞ்சுப்பான். ஆனா, இந்தக் குழந்தைகள எப்படி கையாளணும்ங்கிற விஷயம் பெற்றோருக்குத்தான் தேவை. அதனால பெற்றோர் வந்து தங்கணும்னு சொல்றேன். அதிகபட்சம் பெற்றோர் கத்துக்கிற வரைக்கும் இங்க தங்கணும். அவங்களுக்கு ஒரு தெளிவு வந்திட்டா, சாதாரண பள்ளிக்கு இந்தக் குழந்தைகள அனுப்பிடலாம்.எப்பவும் சிறப்புக் குழந்தைகள தேக்கி வைக்கக் கூடாது. அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தணும். இங்க எந்தக் குழந்தைக்கும் நிரந்தரமா இடம் கிடையாது.

அப்படி வச்சிருக்கிறது சரியான அறமும் இல்ல…’’ என்கிறவருக்கு ஆதரவாக இருக்கிறது அவரின் குடும்பம். ‘‘இப்ப இந்த மையத்துல சேர்க்கக் கேட்டு தமிழகத்தின் பல்வேறு இடங்கள்ல இருந்து அழைப்பு வந்திருக்கு. ஆனா, இங்க வர்ற வழி மண்பாதையா இருக்கு. இடம், வீடுனு நிறைய செலவழிச்சிட்டோம். சாலை அமைக்க அதிகம் செலவு பிடிக்கும். அதுக்கான உதவிகள் மட்டும் தேவைப்படுது. இதற்கு மனசு உள்ளவங்க உதவலாம். ஜனவரிக்குப் பிறகு முழுவீச்சுடன் இயங்குவோம். எதிர்காலத்தில் சிறப்புக் குழந்தைகளுக்கு வாழ்க்கையைக் கத்துத் தர்ற வாழ்வியல் மையமா இது திகழும்…’’ என நம்பிக்கையுடன் சொல்கிறார் ‘வாசி’ வானதி.

Related posts

Leave a Comment