அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் ரமலான் வாழ்த்து

சென்னை: இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் பெருநாள் தமிழகத்தில் நாளை கொண்டாடப்படும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளனர். ரமலான் மாதத்தின் 30 நாட்களும் பகலில் உண்ணாமல், பருகாமல் பசி என்பதை யாவரும் உணரும் வகையில் நோன்பு நோற்பதை இஸ்லாமியர்கள் கடைபிடித்து இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில்;

ரமலான் வாழ்த்து ஈகை திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த புனித நாளில் உலகில் அமைதி நிலவட்டும்; அன்பு தழைக்கட்டும்; மகிழ்ச்சி பெருகட்டும்.

அன்பு பாராட்டி இறை அருளை பெறுவதற்காக புனித ரமலான் மாதத்தில் இஸ்லாமியப் பெருமக்கள் நோன்பிருந்து, உடலையும், உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி எல்லோரிடத்திலும் அன்பு பாராட்டுவார்கள். ஏழை மக்களுக்கு உணவளித்து வாழ்வில் அனைத்து நலன்களையும், வளங்களையும் பெற்று மகிழ்வுடன் வாழவேண்டும் என்று இறைவனை தொழுது, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில்;

இதயபூர்வமான அன்பிற்கு இலக்கணமாக, இரக்கம் – கருணையின் அடையாளமாக, ஈகைக் குணத்தின் வெளிப்பாடாகத் திகழும் இஸ்லாமிய சமுதாயப் பெருமக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இதயபூர்வமான இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய சமுதாய மக்களின் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும், திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் அயராது பாடுபட்டு வருகிறது என்பதை இஸ்லாமியர் அனைவரும் அறிவர்.

நல்வாழ்வு ஒப்பற்ற இந்தச் சமுதாயத்தின் வாழ்க்கைத் தரமும் – நல்வாழ்வும் மேலும் உயர்ந்து, சிறப்பாக அமைந்திடவும், சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் நாளும் தழைத்திடவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த இரமலான் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து மகிழ்ச்சி கொள்கிறேன்.

Related posts

Leave a Comment