தமிழகத்தில் தொழில் துவங்க 9 நிறுவனங்களுக்கு இ.பி.எஸ்.,அழைப்பு

சென்னை :உலக அளவில், வானுார்தி துறையில், தலைசிறந்த ஒன்பது முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து, முதல்வர் இ.பி.எஸ்., கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், உலக பொருளாதார சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை, இந்தியாவிற்கு மாற்ற முடிவெடுத்துள்ளன. அம்முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக முதல்வர், சிறப்பு பணிக் குழு அமைத்துள்ளார்.

கடந்த வாரம், தமிழகத்தில் தொழில் துவங்க அழைப்பு விடுத்து, 13 தொழில் நிறுவனங்களுக்கு, முதல்வர் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக, ‘யுனைடெட் டெக்னாலஜி, ஜெனரல் எலக்ட்ரிக்’ உட்பட, ஒன்பது முன்னணி வானுார்தி நிறுவனங்களின் தலைவர்களை, தமிழகத்தில் முதலீடு செய்ய, நேரடியாக அழைப்பு விடுத்து, முதல்வர் கடிதம் எழுதி உள்ளார்.

அதில், தமிழகத்தில், புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள, பல்வேறு சாதகமான அம்சங்கள், சிறப்பான தொழில் சூழல் ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார். புதிய தொழில் முதலீடுகளுக்கு, தமிழக அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும், தேவைகளுக்கேற்ப ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

Related posts

Leave a Comment