சீனாவின் அதே யுக்தி.. இந்தியா கொடுத்த நச் பதிலடி.. பிற நாடுகளும் அணி சேர வாய்ப்பு.. இனிதான் ஆட்டம்

டெல்லி: அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எப்படி சீனா கையாண்டதோ அதேபோல சீன நிறுவனங்களை இந்தியா கையாள ஆரம்பித்துள்ளது. இது பிற நாடுகளுக்கும் சீனாவுக்கு எதிரான உத்வேகத்தை கொடுக்க வாய்ப்புகளை திறந்து விட்டுள்ளது. கடந்த தசாப்தத்தில் சீனா, கூகுள் மற்றும் பேஸ்புக் இல்லாத ஒரு மாற்று ஆன்லைன் பிளாட்பார்மை திட்டமிட்டு உருவாக்கியது. இப்போது அதன் நிறுவனங்கள், இந்தியாவின் ஆக்ரோஷத்தால் நிலைதடுமாறி நிற்கின்றன. சீனாவின் மிகப்பெரிய, 59 செல்போன் செயலிகளை தடை செய்வதான, இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத இந்த முடிவு, சீன நாட்டின் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி.

சீனாவின் தந்திரம் பல ஆண்டுகளாக சீன அரசாங்கத்தால் அமல்படுத்தப்பட்ட கெடுபிடிகளுக்கு பின்னால் செழித்து வளர்ந்தவை இந்த நிறுவனங்கள். அமெரிக்காவின் பிரபலமான இணையதளங்கள் பலவற்றுக்கு சீனா தடை விதித்திருந்தது. இப்போது, அதே சுவையை சீனாவுக்கு இந்தியா காண்பித்துள்ளது. அதிலும், உலகின் 2வது பெரும் மக்கள் தொகை கொண்ட, அதிக இளைஞர்களை கொண்ட இந்தியா போன்ற ஒரு நாடு டிஜிட்டலாக பதிலடி கொடுத்திருப்பது மிகப்பெரிய முன்னெடுப்பு.

பிற நாடுகளும் பின்பற்றும் இந்த தடையை சிறப்பாக செயல்படுத்தினால், ஐரோப்பாவிலிருந்து தென்கிழக்கு ஆசியா வரையிலான பிற நாடுகளுக்கு இது ஒரு மாதிரியாக மாறக் கூடும். ஒரு பக்கம் சீனாவின் இணையவழி ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவதோடு, இந்திய மக்களின் டேட்டா பாதுகாப்புகளையும் இதை இது உறுதி செய்கிறது. சீனாவின் டிக்டாக் 200 மில்லியன் பயனாளர்களை கொண்டுள்ளது, ஜியோமி நம்பர் 1 ஸ்மார்ட்போன் பிராண்டாக உள்ளது. மேலும், அலிபாபா மற்றும் டென்சென்ட் தங்கள் சேவைகளை தீவிரமாக்கிக் கொண்டுள்ளன. ஆனால் இந்தியாவின் தற்போதைய டிஜிட்டல் கொள்கை அந்த முன்னேற்றத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக மாறப்போகிறது.

அமெரிக்கா முன்முயற்சி மேலும் 5 ஜி நெட்வொர்க்குகளுக்கு சீனாவின் ஹுவாவே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை பயன்படுத்துவதை நிறுத்த அமெரிக்கா, பல நாடுகளை அணிதிரட்ட முற்படும் நிலையில், இந்தியாவும் சீனாவுக்கு எதிராக முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. இது பரந்த புவிசார் அரசியலில் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்து வரும் தொழில்களில் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்துவதற்கு தயாராக இருப்பதால், இந்தியாவின் நடவடிக்கைகள் உலகெங்கிலும் உள்ள நாடுகளை யோசிக்க வைக்கும். சீனா நிறுவனங்கள் பயனர் டேட்டாக்களை சேகரிப்பது ஆபத்தாக முடியும் என அவை யோசிக்கும்.

சீனாவுக்கு பதிலடி “புவிசார் அரசியலின் அனைத்து அம்சங்களிலும் டெக்னோ-தேசியவாதம் அதிகம் வெளிப்படும். தேசிய பாதுகாப்பு, பொருளாதார போட்டித்திறன், சமூக விழுமியங்களும் மாறும்” என்கிறார் ஹின்ரிச் அறக்கட்டளையின் சிங்கப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் அலெக்ஸ் காப்ரி. “சீன தொழில்நுட்ப நிறுவனங்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீனாவின் புவிசார் அரசியல் அபிலாஷைகளிலிருந்து பிரிப்பது கடினமாக இருக்கும். அவர்கள் தங்களை அதிகளவில் இறுக்கமாக பூட்டிக் கொண்டிருப்பதை உணர்வார்கள்.” என்றும் அவர் தெரிவித்தார்.

தொழில்நுட்பம் முக்கியம் சீனாவையும் ஹுவாவே போன்ற தேசிய சாம்பியன் நிறுவனங்களையும் கட்டுப்படுத்த ட்ரம்ப் நிர்வாகம் உலகளாவிய பிரச்சாரம் நடத்துகிறது, மறுபக்கம், இந்தியா 59 ஆப்களுக்கு தடை விதிக்கிறது. நாடுகள் தங்களை புவிசார் அரசியல் ரீதியாக உறுதிப்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன என்பதற்கு இதெல்லாம் சாட்சிகள்.

அமெரிக்காவுடன் இந்தியா நட்பு “இந்தியாவுடனான மோதலின் தாக்கம், இந்தியாவை அமெரிக்கா நோக்கி தள்ளக்கூடும் என்று சீனா நிச்சயமாக கவலைப்பட வேண்டும்” என்று லிங்னன் பல்கலைக்கழகத்தின் ஆசிய பசிபிக் ஆய்வுகள் மையத்தின் இயக்குனர் ஜாங் பஹோஹு கூறுகிறார். “இந்தியாவின் இந்த சமீபத்திய பொருளாதார நடவடிக்கைகள் சீனாவுக்கு பெரிய ஆச்சரியம் அளித்திருக்காது. உள்நாட்டு தேசியவாதத்தை பூர்த்தி செய்ய மோடி அரசு இப்படித்தான் நடவடிக்கை எடுக்கும் என்பதை எதிர்பார்த்திருப்பார்கள்” என்கிறார் அவர்.

சீனா புலம்பல் சீன, வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து சீனா கடுமையாக கவலை கொண்டுள்ளது என்று தெரிவித்தார். “சீனர்கள் உட்பட சர்வதேச முதலீட்டாளர்களின் நியாயமான மற்றும் சட்ட உரிமைகளை நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார். டெல்லியில் உள்ள சீனத் தூதரகமும் இந்தியாவின் நடவடிக்கையை ஒரு தனி அறிக்கை வெளியிட்டு விமர்சித்தது.

Related posts

Leave a Comment