மத்திய அரசு வழிகாட்டுதலின்படியே.. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு அனுமதி இல்லை.. முதல்வர் விளக்கம்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக மத ஊர்வலங்களை நடத்த மத்திய அரசு தடை விதித்து உள்ளது. அதனை பின்பற்றியே மத ஊர்வலங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பிரம்மாண்ட சிலைகளை வைத்து 10 நாட்கள் பஜனைகள் களைகட்டும். பக்தர்கள் கூட்டம் அலை மோதும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அனைத்து மத பண்டிகைகள், விழாக்கள் கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Ganesha Chaturthi festival as per Central Government guidelines - Chief Minister Edapadi Palanisamy

சித்திரை திருவிழா மதுரையில் ரத்து செய்யப்பட்டது. மசூதிகளில் ரம்ஜான் தொழுகை நடத்த அனுமதிக்கப்படவில்லை. அதே போல ஈஸ்டர் பண்டிகை காலத்தில் தேவாலயங்களில் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைத்து வழிபட அரசு தடை விதித்து உள்ளது. இதனை ஏற்க இந்து முன்னணியினர் மறுத்து வருகின்றனர். தடையை மீறி கடந்த ஆண்டைப்போல இந்த ஆண்டும் சிலை வைத்து வழிபடுவோம் என்று கூறியுள்ளனர்.

இந்து முன்னணியின் நிலைப்பாட்டை நாங்களும் பின்பற்றுவோம், ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுப்போம் என்று பாஜக தலைவர் எல். முருகன் கூறியுள்ளார். இந்த நிலையில் வேலூரில் கொரோனா ஆய்வுப்பணிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விதிக்கப்பட்ட தடையைப் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, மத்திய அரசு கூறியுள்ள வழிமுறைகளை பின்பற்றியே மத ஊர்வலத்திற்கு தடை விதித்துள்ளதாக கூறினார். கொரோனா அச்சுறுத்தலால் மத ஊர்வலங்களை மத்திய அரசு அனுமதிக்கவில்லை அதனை தமிழக அரசு பின்பற்றுகிறது. நீதிமன்ற உத்தரவு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி தெரிவித்துள்ளார்.

Related posts

Leave a Comment