அது அவர்கள் கருத்து.. அரசு கருத்து இல்லை.. தமிழகத்திற்கு 2வது தலைநகர் கிடையாது.. முதல்வர் அறிவிப்பு

தருமபுரி: தமிழகத்திற்கு சென்னை மட்டும்தான் ஒரே தலைநகரம், 2வது தலைநகரம் குறித்து அரசுக்கு எந்த கருத்தும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

கடந்த சில நாட்களாகவே, மதுரை மண்டலத்தைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள், மதுரையை 2வது தலைநகரமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர்.

மற்றொருபக்கம், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், திருச்சியை, 2வது தலைநகரமாக்க வேண்டும் என்று கருத்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தருமபுரியில் இன்று பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம், இதுதொடர்பாக கேள்வி முன்வைத்தனர் நிருபர்கள். தமிழகத்தில் இரண்டாவது தலைநகர் உருவாக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகிறார்களே, இது தொடர்பாக உங்கள் கருத்து என்ன என்று நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, “அது அவர்களுடைய கருத்து.. அரசின் கருத்து கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார் முதல்வர்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

சிறுதொழில் அதிகமாக இருக்கக்கூடிய மாநிலம் தமிழகம். தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தி ஒரு லட்சம் கோடிக்கும் மேலாக முதலீட்டை ஈர்த்துள்ளோம். அந்த பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கொரோனா நோய்த்தொற்று காலத்திலும், புதிய புதிய தொழில்களை தமிழகத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்த அரசு அதிக தொழில் முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.

வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 2வது தலைநகர் தொடர்பாக தேவையற்ற சர்ச்சைகள் அதிகரித்த நிலையில், முதல்வரின் இந்த பேட்டி, அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது.

Related posts

Leave a Comment