எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்.. சர்வதேச மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை இன்று இரவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா நோய் தொற்றால் சென்னையில் உள்ள எம்ஜிஎம் என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையில் சில நாட்கள் முன்னேற்றம் தென்பட்டாலும் பல நாட்கள் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாக தான் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.

வாழ்த்து எஸ்பிபி உடல்நிலை தேற வேண்டும் என்பதற்காக சினிமா துறையினர் மட்டுமின்றி ரசிகர்கள் பொதுமக்கள் என பல தரப்பினரும் இன்று மாலை கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு திரைப்பிரபலங்களும், எஸ்பி பாலசுப்பிரமணியம் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கூட்டு பிரார்த்தனை இயக்குனர் பாரதிராஜா ஏற்பாட்டின் பேரில் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பல்வேறு திரையுலக பிரபலங்களும் கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்றனர். தமிழகம் முழுக்க, சிறுவர் சிறுமிகள் என பல்வேறு தரப்பினரும் பாலசுப்பிரமணியம் புகைப்படத்துடன் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்

இந்த நிலையில் இரவு 8.30 மணி அளவில் எம்ஜிஎம் மருத்துவமனை ஒரு செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது.

வெளிநாட்டு மருத்துவர்கள் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச மருத்துவத்துறை நிபுணர்களுடன் எங்களது மருத்துவ குழுவினர் தொடர்பில் இருக்கிறார்கள். தொடர்ந்து எஸ்பி பாலசுப்ரமணியம் உடல்நிலையை கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment