ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அப்பாவை மீட்டெடுக்கும்… நன்றி சொல்ல வார்த்தையில்லை – எஸ்பிபி சரண்

சென்னை: அப்பாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடலில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும்

ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் வேண்டுதலும அவரது உயிரை மீட்டெடுக்கும் என்று எஸ்.பி.பி சரண் கூறியுள்ளார். அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவருக்கும் நன்றி என்று கூறியுள்ள சரண், அப்பாவிற்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ள அனைவருக்கும் நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

There is no word to thank everyone who prays for Dad - SBP Charan #LetsPrayForSPB

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு கடந்த 5ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வந்த நிலையில் கடந்த 14ஆம் தேதி முதல் திடீரென மோசமடைந்தது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எஸ்.பி பாலசுப்ரமணியம். தினசரியும் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நோயிலிருந்து குணமடைய வேண்டி அவரது நலம் விரும்பிகளும் நண்பர்களும் வீடியோ மூலமாக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தற்போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது. திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இணைந்து இன்று மாலை கூட்டுப்பிராத்தனை செய்ய அழைப்பு விடுத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா. நடிகர் ரஜினிகாந்த் இந்த பிரார்த்தனையில் பங்கேற்பதாக கூறியுள்ளதோடு ரஜினி மக்கள் மன்றத்தினரும் இந்த கூட்டுப்பிரார்த்தனையில் பங்கேற்க உள்ளதாகவும் கூறியுள்ளார் ரஜினிகாந்த்.

பாடும் நிலா எழுந்து வா கூட்டுப்பிரார்த்தனை செய்வோம் என்று உருக்கமாக அழைப்பு விடுத்துள்ளார் ரஜினிகாந்த். இந்த நிலையில் தினமும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை பற்றி தகவல் கூறும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் இன்றும் வீடியோ மூலம் அப்பாவிற்காக பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றாலும் ரசிகர்களின் பிரார்த்தனை அவரை மீட்டெடுக்கும் என்று நம்புகிறோம். உங்கள் பிரார்த்தனைகள் வேலை செய்கின்றன. அப்பாவிற்காக கூட்டுப்பிரார்த்தனை செய்யும் அனைவருக்கும், பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளவர்களுக்கும் நன்றி. உங்களின் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் அவர் நலமடைய உதவும் உங்களின் பிரார்த்தனைகளுக்கு குடும்பத்தோடு நாங்கள் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார் எஸ்.பி.பி சரண்.

Related posts

Leave a Comment