இ–சேவை மையத்தில் டோக்கன்: அதிகாலை முதல் காத்திருக்கும் மக்கள்

காரியாபட்டி: இ–சேவை மையத்தில் டோக்கன் வழங்கும் முறையால் புதிய ஆதார் அட்டை பெறவும், பெயர், முகவரி திருத்தம் செய்ய விரும்புவோர் அதிகாலையிலிருந்து காத்திருந்து டோக்கன் வாங்க வேண்டிய நிலையில் சிரமப்படுகின்றனர்.

காரியாபட்டி மற்றும் அதன் சுற்று கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் புதிய ஆதார் அட்டை பெற, முகவரி, அலைபேசி எண், போட்டோ திருத்தம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தாலுகா அலுவலகத்தில் உள்ள இ–சேவை மையத்துக்கு வருகின்றனர். தனியார் ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் இம்மையத்தில் தினமும் 40 பேர் மட்டுமே இப்பணிகளுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். டோக்கன் பெற்றால் மட்டுமே இப்பணிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் விவரம் அறியாதவர்கள் ,பல நாட்கள் அலைந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. டோக்கன் வாங்கவும் அதிகாலை 5:00 மணிக்கு தாலுகா அலுவலகத்தில் வரிசையில் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு 9:30 மணிக்கு பின்பே டோக்கன் கொடுக்கின்றனர். அதன் பின் பணிகளை மேற்கொள்வதால் பசியுடன் காத்துகிடக்கின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது: டோக்கன் வாங்கி தான் ஆதார் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு தெரியாது. வேலை நாட்களில் வந்தால் நாளை வாருங்கள் என அனுப்பி விடுவர். டோக்கன் வாங்கியவர்கள் மட்டுமே ஆதார் பணிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்கிற விவரம் தெரிந்து அதிகாலை 5 :00மணிக்கே வரிசையில் நிற்கிறோம். ஆதார் இல்லாமல் எந்த பணிகளும் செய்ய முடியாது என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் கூடுதல் பணி ஆட்களை நியமித்து ஆதார் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என்றனர்.

Related posts

Leave a Comment