விருதுநகரில் தி.மு.க., உடன் மோதும் பா.ஜ., ; முக்கிய கட்சிகளின் ஓட்டு வங்கியை உடைக்கும் அ.ம.மு.க.,

விருதுநகர்: விருதுநகர் சட்டசபை தொகுதியில் இம்முறை பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ள நிலையில், அ.ம.மு.க.,வும் களம் இறங்கிய நிலையில் இக்கட்சி வேட்பாளர் முக்கிய கட்சிகளின் ஓட்டு வங்கியை உடைப்பதால் வெற்றிக்கனியை எக்கட்சி பறிக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடம் அதிகரித்துள்ளது.

இத்தொகுதியில் அனைத்து சமுகத்தினரும் வசிக்கின்றனர்.நாயக்கர், நாடார், தேவர், தாழ்த்தப்பட்ட சமுகத்தினர் அதிகமாக உள்ளனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் என அமைதியான தொகுதியாக விருதுநகர் உள்ளது. நாடார், நாயக்கர் என இதுவரை இவ்விரண்டு சமுகத்தில் இருந்து தான் பெரும் கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இத்தொகுதியில் தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக நாயக்கர் சமுகத்தை சேர்ந்த ஏ.ஆர்.ஆர்., சீனிவாசன் உள்ளார். இவர் 1996ல் எம்.எல்.ஏ.,, 2001ல் போட்டியிட்டு தோல்வியை தழுவி இருக்கிறார். 2016ல் வெற்றியை தொடர்ந்து தற்போது நான்காவது முறையாக போட்டியிடுகிறார்.இருப்பினும் தற்போது மீண்டும் தொகுதியை தக்க வைக்க சற்று சிரமம்படவேண்டிய நிலையில் உள்ளார். 2016ல் கொடுத்த வாக்குறுதிகள் சொற்பம் என்றாலும் அதை நிறைவேற்றியும் உள்ளார். புது பஸ்டாண்ட் செயல்படுத்தாதது, விருதுநகரின் முக்கிய பிரச்னையான குடிநீர் பிரச்னை தற்போது வரை தீர்க்கப்படாதது போன்றவை சீனிவாசனுக்கு மைனஸ். இருப்பினும் இவர் தீர்வு காண முயன்ற பாதாளசாக்கடை, குடிநீர் உள்ளிட்ட பிரச்னைகளில் ஆளுங்கட்சியினரின் தலையீடு இருந்ததால் சில விஷயங்களை செய்ய முடியாமல் தவித்தை மக்களே நேரடியாக பார்த்துள்ளனர். சீனிவாசன் மீது கெட்ட பெயர் இல்லாதது, மக்களுடன் எப்போதும் இணக்கமாக இருப்பது போன்றவை பிளஸ். பா.ஜ., வேட்பாளராக யார் நிற்பது என்பதில் குழப்பம் நீடிப்பதால் எதிர்த்து நிற்பவரை பொருத்தே யாருக்கு வெற்றி என்பதையும் தீர்மானிக்க முடியும்காரணம் 2016ல் வெறும் 2708 ஓட்டுக்களில் தான் அ.தி.மு.க., தோற்றது. 2016ல் பா.ஜ., தனித்து போட்டியிட்டபோது அன்றைய வேட்பாளர் காமாட்சி 7013 ஓட்டுக்களே பெற்றிருந்தாலும் இன்று அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ள கூடுதல் பலத்தால் தி.மு.க.,வுடன் சரிக்கு சமமாக மோதுகிறது. தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. கம்யூனிஸ்ட் தொகுதியில் அதிகம் இருப்பதும் தற்போதைய எம்.எல்.ஏ., சீனிவாசனுக்கு பலம். அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட கோகுலம் தங்கராஜ் தற்போது சீட் தராத விரக்தியில் அ.ம.மு.க.,வில் இணைந்து விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அ.ம.மு.க., சார்பில் கோகுலம் தங்கராஜ் தரும் நெருக்கடியை பொறுத்து பா.ஜ., தி.மு.க., ஓட்டுவங்கிக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்.இதோடு இவர் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரும் கட்சிகள் ஓட்டை அதிகம் பிரிப்பார் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் உள்ளது.

Related posts

Leave a Comment