காகித ஏற்றுமதிக்கு தடை விதியுங்க! அச்சக உரிமையாளர்கள் வலியுறுத்தல்

சிவகாசி : ”காகித விலையை குறைக்க ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும்,” என, சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிவகாசி பகுதியில் 200க்கு மேற்பட்ட அச்சக ஆலை உள்ளது. 50 ஆயிரம் பேர் நேரடி வேலைவாய்ப்பு பெறுகின்றனர்.அச்சுத் தொழிலில் இணை தொழில்களாக லேமினேஷன், ஸ்கோரிங் உள்ளிட்ட தொழில்கள் உள்ளது.சிவகாசியில் அச்சடிக்கப்படும் அச்சுப்பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது ஐரோப்பிய நாடுகளுக்கு சிவகாசியிலிருந்துதான் பள்ளி நோட்டுப் புத்தகம் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அச்சு காகிதம், காகித அட்டை கடுமையான விலை ஏறி வருவதால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சிவகாசி அச்சக உரிமையாளர்கள் சங்க கூட்டம் நடந்தது. இதில் பேசிய சங்க தலைவர் கணேஷ்குமார்: காகித விலை உயர்வு, காகிதம் தட்டுப்பாடுக்கு முக்கிய காரணம் இந்தியாவில் தயாரிக்கும் காகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான்.

உள்நாட்டு தேவைக்குப் போக மீதமுள்ளதை வெளிநாடுகளுக்கு அனுப்பலாம். உள்நாட்டில் தேவை அதிகமாக இருக்கும்போது ஏன் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். மத்திய அரசு உடனடியாக இதற்கு தடை விதிக்க வேண்டும்,என்றார்.மாணிக்கம் தாகூர் எம்.பி., பேசியதாவது:உங்கள் பிரச்னைகள் குறித்து உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வேன், என்றார்.

Related posts

Leave a Comment