அவர் அமைச்சரே அல்ல ரவுடி, பபூன்; ராஜேந்திர பாலாஜியை சாடிய ஸ்டாலின்

ராஜபாளையம் : ”சிவகாசி மக்களால் விரட்டப்பட்டவர், அவர் ஒரு அமைச்சரே அல்ல ரவுடி, பபூன் ,”என , ராஜபாளையத்தில் பிரசாரத்தில் ஈடுபட்ட தி.மு.க.,தலைவர் ஸ்டாலின், அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை கடுமையாக சாடினார்.

தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களான சாத்துார் ராமச்சந்திரன்(அருப்புக்கோட்டை தங்கம் தென்னரசு(திருச்சுழி) தங்கபாண்டியன்( ராஜபாளையம்) சீனிவாசன்(விருதுநகர்), அசோகன்(சிவகாசி-காங்.,), ரகுராமன் (சாத்துார்- ம.தி.மு.க.,) மாதவராவ்(ஸ்ரீவி., -காங்.,) ஆகியோரை ஆதரித்து ராஜபாளையத்தில் அவர் பேசியதாவது: உங்களிடம் நான் கேட்க விரும்புவது தி.மு.க.,கூட்டணியில் உள்ள ஏழு வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்.விடுதலை வீரர்கள் நிரம்பிய ராஜபாளையம் வந்துள்ளேன்.

தமிழக அரசின் சின்னமான கோபுரம் தாங்கிய ஸ்ரீவில்லிபுத்துார், காரமான சேவுக்கு பேர் போன சாத்துார். மல்லிகை அரும்பு கோட்டையான அருப்புக்கோட்டை, குட்டி ஜப்பானான சிவகாசி, ரமணர் பிறந்த திருச்சுழி, காமராஜர் பிறந்த விருதுநகர் இப்படி பல பெருமைகளை பெற்றுள்ள தொகுதிகளுக்கு ஓட்டு கேட்டு வந்துள்ளேன். மற்ற தொகுதிகளுக்கு எல்லாம் நான் ஓட்டு கேட்க செல்லும் போது நம்முடைய வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என விரும்பி வேண்டி கேட்பது வழக்கம். இப்போது ஒருவருக்கு ஓட்டு போடக்கூடாது என சொல்வதற்காக இந்த தொகுதிக்கு வந்துள்ளேன். தப்பி தவறி கூட அவருக்கு போட கூடாது.

அவர் யார் என புரிந்து கொண்டீர்களா. ராஜபாளையம் தொகுதி மக்களை அன்போடு கேட்டு கொள்கிறேன் ராஜேந்திரபாலாஜிக்கு ஓட்டு போடாதீர்கள். ஏற்கனவே சிவகாசி மக்களால் விரட்டப்பட்டு ராஜபாளையம் வந்துள்ளார். அவரை ராஜபாளையம் மக்கள்தான் இங்கிருந்து விரட்ட வேண்டும். அ.தி.மு.க., அமைச்சரவையில் இவருக்கு ரவுடித்துறை அமைச்சர். ரவுடி என்றால் அதற்கு ஒரு கெத்து இருக்க வேண்டும். ஆனால் இவர் பபூன் , பலுான் ரவுடி.

வாயை திறந்தால் வெட்டிடுவேன் குத்திடுவேன், நாக்கறுப்பேன், வீட்டு கதவை உடைப்பேன், சட்டையை கிழிப்பேன், துாக்கில் தொங்க விடுவேன், ரப்பர் குண்டால் சுடுவேன், தீவிரவாதியா மாறுவேன்,மற்றவர்கள் சாதி, மதம் பெயர் சொல்லி திட்டுகிற அமைச்சராக இருக்கிறார். இதெல்லாம் ஒரு அமைச்சர் பேசுகிற பேச்சா. சொந்த கட்சி எம்.எல்.ஏ.,வே தன் உயிருக்கு ஆபத்து என முதல்வர் பழனிச்சாமியிடம் புகார் அளித்த கதையும் உங்களுக்கு தெரியும்.

கொச்சைப்படுத்தி கேவலப்படுத்தி பேசுவது தான் இவரது தொழில். ஜெயலலிதா மட்டும் உயிரோட இருந்திருந்தால் இவர் அமைச்சராகவே இருந்திருக்க முடியாது. அ.தி.மு.க., ஜெயித்தால் பா.ஜ., ஜெயித்ததாக தான் அர்த்தம். இவ்வாறு நான் சொல்வதற்கு முதல் காரணம் இந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். மோடியை டாடி என்றவர் இவர் தான்.

தினமும் மைக்கை பார்த்தால் எதையாவது உளறுவது, என்றைக்காவது தனது துறையை பற்றி பேசியிருக்கிறாரா. கிடையாது. பால் வாங்குவதில் பெறக்கூடிய கமிஷன் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு வாய் திறந்திருக்கிறாரா. ஆவினில் ரூ.300 கோடி வரை வருவாய் இழப்பு சந்தித்த போது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நல சங்கம் அளித்த புகாருக்கு பதில் கூறியிருக்கிறாரா. ஆட்சி வந்ததும் ராஜேந்திரபாலாஜியை சிறைக்கு அனுப்புவது தான் முதல் வேலை, என்றார்.

Related posts

Leave a Comment