பூமித்தாயின் மூச்சை அடைக்கும் பாலிதீன்! இன்று உலக பூமி தினம்

விருதுநகர் : பூமியானது மனிதர்கள் உட்பட பல கோடி உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை உறுதி செய்யும் பெரும் இயற்கை. மனிதன் பல தீமை செய்தும் அதை பொறுத்து மீண்டும் மீளும் வகையில் தான் பூமியும் கடவுளால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், நீர்நிலைகள் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பூமியை காக்கும் வகையில் ஆண்டுதோறும் ஏப். 22ல் உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது. ‘நம் பூமியை மீட்டெடுப்போம்’ என்பதே இந்தாண்டின் கருபொருள். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழல் மாசுபாடு, மழையின்மை, பூமி வெப்பமடைதல் அதிகரித்து வருகிறது. இது மனித வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது. இயற்கை இல்லாமல் ஒரு நிமிடம் கூட மனிதனால் வாழ முடியாது. இதை இன்றைய குழந்தைகளிடம் எடுத்து செல்ல வேண்டும். அவர்கள் பூமியின் எதிர்காலத்தை காப்பாற்றுபவர்கள். இயற்கையை நாம் நன்றாக கவனித்து கொண்டால் இயற்கையும் நம்மை சிறப்பாக கவனிக்கும்.

மனிதர்கள் நம் வசதிக்காக பூமிக்கு வளம் அளிக்கும் மரங்களை சாம்பலாக்குகிறோம். பாலிதீன் எனும் பெயரில் நீரை நிலத்திற்கு அடியில் செல்லவிடாமல் பூமித்தாயின் மூச்சை அடைக்கிறோம். பூமியின் ரத்தம் போல் உள்ள நீரை மாசுப்படுத்தி அதை நோயாளியாக மாற்றுகிறோம். இத்தனை செய்தும் பூமி இன்னும் நமக்கு மழையையும், சுத்தமான காற்றையும் முடிந்த அளவு தந்து கொண்டு தான் இருக்கிறது.

Related posts

Leave a Comment