ஊரடங்கிலும் உன்னத உழைப்பு; வீட்டிற்குள் துவங்கிய சுய தொழில்

விருதுநகர் -: மாவட்டத்தில் ஊரடங்கால் வேலை இழந்து பலர் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில் உழைப்பு ஒன்றே தாரக மந்திரம் என வீட்டிற்குள்ளேயே சுய தொழிலில் சிலர் ஈடுபட்டு பொழுதை பயனுள்ளதாக மாற்றி வருகின்றனர்.

விருதுநகர் நீராவி தெருவை சேர்ந்தவர் குமார். ஐ.டி. எலெக்ட்ரானிக்ஸ் படித்துள்ளார். தனியார் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கொரோனா தொற்று பரவலால் நிறுவனம் மூடப்பட்டது. தனது படிப்புக்கு ஏற்ப சுய தொழில் துவங்க முடிவெடுத்து வீட்டிற்குள்ளேயே எல்.இ.டி. பல்பு, டியூப் லைட் தயாரித்தார். ஓராண்டு உத்திரவாதத்துடன் தரமான எல்.இ.டி., பல்புகள், டியூப் லைட்டுகளை குறைந்த விலைக்கு சில்லரையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்து வருகிறார். தனது தொழில் ரகசியம் தன்னுடன் மட்டுமே இல்லாமல் விருப்பம் உள்ள நண்பர்கள், சுய தொழில் முனைவோருக்கும் இலவசமாக கற்று தருகிறார்.

குமார் கூறியதாவது: மின் கட்டணம் செலுத்த மின் அலுவலகம் சென்றபோது வளாகத்தில் பிரபல முன்னணி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களின் எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்கள் இரண்டு ஆண்டு உத்திரவாதத்துடன் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதை பார்த்தேன். அதன் தொழில்நுட்பம் குறித்து கூகுள், யூ டியூப் சேனலில் தெரிந்து கொண்டேன். ஊரடங்கு தளர்வின் போது ஐதராபாத்தில் மூலப்பொருட்களை ஆன் லைனின் ஆர்டர் செய்து வாங்கி எல்.இ.டி., பல்பு, டியூப் லைட் தயாரித்து ஓராண்டு உத்திரவாதத்துடன் குறைந்த விலைக்கு விற்று வருகிறேன்.

பொருளின் தரம் குறித்து தெரிந்து கொண்டதால் தென் மாவட்ட அளவில் பிரபலமானேன். ஊரடங்கு தளர்வுக்கு பின் தொழிலை விரித்தி செய்து பலருக்கு வேலை வாய்ப்பு வழங்க உள்ளேன், என்றார். தொடர்புக்கு 85259 99943.

Related posts

Leave a Comment